யோசேப்பின் வாழ்கையிலிருந்து நமக்குள்ள பாடங்கள் - 4
- kvnaveen834
- Jul 9, 2024
- 2 min read
ஊக்கமளிக்கும் சிந்தனைகள்
யோசேப்பின் வாழ்கையிலிருந்து நமக்குள்ள பாடங்கள் - 4
பொறுப்புள்ள ரூபன்
ஆதியாகமம் 37.20-30
20. நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.
21. ரூபன் அதைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய்,
22. அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான்.
. . . . . . . . .
25. பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.
28. அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.
29. பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
30. தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.
குடும்பத்தின் மூத்த மகனாக ரூபன் இருந்ததால், தனது குடும்பத்தின் பொறுப்புகளை அவர் சுமந்தார். யோசேப்பின் சகோதரர்கள் பொறாமையால் அவரைக் கொல்லத் திட்டமிட்டபோது, ரூபன் அவனுக்காக செயல்பட்டு. அதற்குப் பதிலாக யோசேப்பை ஒரு குழியில் வீசுமாறு அவர் ஆலோசனை கொடுத்தார். ரூபனின் இச்செயலானது, அவரது கடமை உணர்வையும், அவரது இளைய சகோதரனைப் பாதுகாக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது. பலவிதமான விரோதத்தால் சூழப்பட்டபோதும், சரியானதை நிலைநிறுத்தும் அவருடைய தலைமைத்துவமும், முயற்சியும் நம்மிடம் இருக்க வேண்டிய நல்ல பண்புகளாகும்.
மற்ற சகோதரர்கள் தங்கள் உணவை சாப்பிட உட்கார்ந்தபோது ரூபன் அங்கு இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். யோசேப்பை குழிக்குள் எறிந்த பிறகு, அவருடைய சகோதரர்கள் அலட்சியமாக சாப்பிட உட்கார்ந்தார்கள். ரூபன் அங்கே இல்லாதது சகோதரர்களுடைய செயல்களில் அவரது விருப்பமின்மையையும், அவர்களின் செயல்களை அவர் ஏற்கவில்லை என்பதையும் வெளிப்படுத்துகிறது. அவர்களின் தொடர்பிலிருந்து ரூபன், குறைந்த பட்சம் சில காலம் வரை, மோசமான திட்டங்கள், மற்றும் அவரது சகோதரர்களின் ஒழுக்கக்கேடான செயல்கள் ஆகியவற்றிலிருந்து தன்னைத் விலக்கிக் கொள்ளத் தீர்மானித்திருந்தார். ஆனால் அவர் தன்னுடைய தகப்பனிடம் இந்த உண்மையைச் சொல்லவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. முக்கியமான தீர்மானங்கள் எடுக்கிற இடத்தில அவர் இல்லாததால் ஏற்பட்ட விளைவுகள் தீமையானவைகளாக இருக்கிறதை அறிய முடிகிறது.
ரூபன் குழிக்குத் திரும்பி வந்து யோசேப்பு, மீதியானிய வியாபாரிகளுக்கு விற்கப்பட்டதை கண்டபோது, துக்கத்தினால் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். ஒருவரின் ஆடைகளைக் கிழிப்பது என்பது துக்கம் மற்றும் விரக்தியின் வெளிப்பாடாகவும், குறிப்பாக, வேதாகமத்தில் ஆழ்ந்த உணர்ச்சி, வலி மற்றும் வருத்தத்தை குறிக்கிறது. யோசேப்பை பாதுகாக்க அவர் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. அது ரூபனின் வேதனை, இழப்பு மற்றும் உதவியற்ற ஆழ்ந்த உணர்வை விளக்குகிறது
சிந்தனைக்கு
¶ நாம் பொறுப்புடையவர்களாகவும், முக்கியமாக நம்முடன் இருப்பவர்களின் சத்தியத்திற்காக மற்றும் உண்மைக்காக நிமிர்ந்து நிற்கவேண்டும்.
¶ நாம் தனியாக நிற்கவேண்டிய நிலைவந்தாலும், கெட்ட மனிதர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
📖 இந்நாளுக்கான வசனம் 📖
சங்கீதம் 34: 14
_தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
Writer --- Sis Shincy Jonathan
Translation--- Bro Jaya Singh
Mission sagacity Volunteer
Tamil
Comments