அன்னாளின் வாழ்க்கையிலிருந்து சில பாடங்கள்
லிஜாய்ஸ் சி. ஜோஸ், நெல்லிக்குந்நு
பைபிளின் பக்கங்களை நாம் பரிசோதித்து பார்க்கும்போது, கர்த்தர் மீதுள்ள உறுதியான நம்பிக்கையால் பலவீனத்தில் பலப்படுத்தப்பட்ட விசுவாச வீரர்களின் வரலாறு பதிவு செய்யப்பட்டிருப்பத்தைக் காணலாம். அந்த வகையில் மிகவும் விரும்பப்படும் பதவியை வகிக்கும் நபர் அன்னாள். எல்க்கானாவின் இரண்டு மனைவிகளில் அன்னாளும் ஒருத்தி. மற்றவளின் பெயர் பெனின்னா. பெனின்னாவுக்கு குழந்தைகள் இருந்தனர். ஆனால் அன்னாளுக்கு குழந்தைகள் இல்லை. அன்னாளின் கர்ப்பத்தை கர்த்தர் அடைத்திருந்தார். அன்னாளின் வாழ்க்கையில் இருந்து சில ஆவிக்குரிய சத்தியங்களே இந்த செய்தியின் முக்கிய விஷயம்.
1. அன்னாளுக்கு ஒரு எதிரி இருந்தாள். (1 சாமு 1:6)
அன்னாளின் கர்ப்பத்தை கர்த்தர் அடைத்திருந்ததால் அன்னாளின் எதிரி அவளை தொந்தரவு செய்தாள், ஆனால் அன்னாள் விசுவாசத்தில் சோர்வடையவில்லை. நமக்கும் ஒரு எதிரி இருக்கிறான். சாத்தான் தான் நம் எதிரி. அவன் நம்மைத் தொந்தரவு செய்யத் தொடர்ந்து பாடுபடுவான். (1 பேதுரு 5:8) கெர்ச்சிக்கிற சிங்கம் போல சாத்தான் நம்மை விழுங்க முயற்சி செய்து கொண்டே இருப்பான். விசுவாசத்தில் கைவிடாமல் அன்னாளை போல முன்னேற கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக.
2. அன்னாளின் உறுதிமொழி:
அன்னாள் கர்த்தருக்கு முன்பாக ஒரு உறுதிமொழி அல்லது பொருத்தனை பண்ணினாள். அன்னாளை மறவாமல் ஒரு ஆண் குழந்தையைக் கொடுத்தால் அவனை வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கே கொடுப்பதாக அன்னாள் பொருத்தனை செய்தாள். அன்னாள் ஒரு பொருத்தனையை மட்டும் செய்யவில்லை, அவள் அதை நிறைவேற்றினாள், அவள் அதை ஒரு பெரிய விலை கொடுத்து நிறைவேற்றினாள். நியாயாதிபதிகள் புத்தகத்தில் உள்ள யெப்தா ராஜா தனது பொருத்தனையின்படியே தன்னுடைய ஒரே மகளை தியாகம் செய்த சம்பவமும் இதே போன்றதே (நியாயாதிபதிகள் 11:30-39) நாம் அடிக்கடி தீர்மானங்களை எடுக்கிறோம், அவற்றைக் கடைப்பிடிக்க முடியாமல் போகிறோம். கர்த்தர் இதை ஒருபோதும் விரும்புவதில்லை (பிரசங்கி 5:4,5) நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம். பொருத்தனைகளை செய்யவும், கிரையம் கொடுத்து அதை நிறைவேற்றவும் கர்த்தர் அருள் புரிவாராக.
3. அன்னாளின் ஜெபம்:
தனது ஜெபமே அன்னாளின் வாழ்க்கையை வித்தியாசப் படுத்துகிறது. பெரிய பிரச்சனைகளை சந்தித்தபோதும் அன்னாள் ஜெப வாழ்க்கையில் பின்னிட்டு போனதாக காண முடியாது. உண்மையில் பார்த்தால், ஜெப வாழ்க்கையிலும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பின்னோக்கிச் செல்ல அன்னாளுக்கு போதுமான காரணங்கள் இருந்தாலும், அவள் முன்னேறி சென்று கொண்டிருந்தாள். அவளுடைய மனதின் வேதனை அதிகமாக இருந்ததினால் ஜெபத்தின் சத்தம் வெளியே கேட்கவில்லை. அவளுடைய ஜெபத்தின் தீவிரம் அதிகமாகவே இருந்தது. அன்னாள் தன் மகனை தேவாலயத்திற்கு அளித்த பிறகும் ஜெபம் செய்து இருப்பாள், எனவே தான் சாமுவேல் ஒரு பெரிய தீர்க்கதரிசி ஆனார். நாமும் நம் பிள்ளைகளுக்காக தொடர்ந்து ஜெபிப்போம். அதன் காரணமாக அவர்கள் விசுவாச வாழ்க்கையில் வீரர்களாக திகழ முடியும். அன்னாளின் வாழ்க்கை நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையட்டும். கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக