மிஷனரி சரித்திரம்
ஜார்ஜ் முல்லரின் வாழ்க்கை- "ஜெபம் மலைகளை அசைக்கும்" என்பதற்கு ஒரு ஒளிரும் உதாரணம்.
மிஷனரி ஜார்ஜ் முல்லரின் வாழ்க்கை அற்புதமாக இருக்கிறது. திருடனாகவும், பொய்யனாகவும், குடிகாரனாகவும் இருந்த சிறுவனை தேவன் மாற்றினார் என்று இன்று வரை பேசப்படுகிறது. ஜெபம் மற்றும் தேவன் மேலுள்ள நம்பிக்கையின் மூலம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக ஜார்ஜ் முல்லரின் வாழ்க்கை இருக்கிறது. அவர் எப்போதும் கர்த்தருடைய ஊழியர் என்று அழைக்கப்படுவதையே விரும்பினார்.
இந்த மாபெரும் மிஷனரியின் வாழ்க்கைப் பயணத்தை நாம் ஆழமாகப் பார்க்கலாம்.
செப்டம்பர் 27, 1805 அன்று ஜெர்மனியில் ஜார்ஜ் முல்லர் பிறந்தார். இவர் சிறுவயதிலிருந்தே திருட்டு, குடி, சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். அவருக்கு 14 வயதாக இருந்தபோது அவரது தாயார் காலமானார். 1825 இல், முல்லர் ஹாலே பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இறையியல் படித்தார். ஒரு வீட்டில் சென்று பைபிள் படித்தார். இதைத் தொடர்ந்து, தேவன் அவருக்கு யோவான் 3:16ல் இருந்து தேவ அன்பைப் பற்றிய ஒரு வெளிப்பாட்டைக் கொடுத்தார். 1826 இல், அவர் ஒரு மிஷனரி ஆக முடிவு செய்தார்.
வேதாகம பள்ளியில் படித்து முடித்த பிறகு இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டலுக்கு சென்றார். அங்கு மேரியை சந்தித்தார், அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அந்தக் காலத்தில், பிரிஸ்டல் தெருக்களில் பல அனாதை குழந்தைகள் வசித்து வந்தனர். கடுமையான பட்டினியால், அவர்கள் அடிக்கடி மற்றவர்களிடமிருந்து உணவுப் பொருட்களைத் திருடவும் பிடுங்கவும் செய்தனர். அந்தக் குளிர்ந்த காலநிலையில் யாருடைய இரக்கமும் கிடைக்காமல் இரவுகளைக் கழித்தனர். முல்லர் குழந்தைகளைப் பார்த்தார், அவர்களுக்காக ஒரு அனாதை இல்லம் கட்ட வேண்டும் என்று தனது இதயத்தில் மிகுந்த விருப்பம் கொண்டார். "இந்த குழந்தைகளின் கடந்தகால வாழ்க்கையை கருத்தில் கொள்ளாமல், நான் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களைப் பாதுகாப்பேன்" என்று அவர் கூறினார். அவர் தேவனை அதிகம் விசுவாசித்தார், மேலும் அனாதை இல்லத்தின் சீரான செயல்பாட்டிற்காக எந்த மனிதனிடமும் கையேந்த கூடாது என்று முடிவு செய்தார். ஏனென்றால், இது தேவனுடைய வேலை என்றால், அவர் நிச்சயமாக தேவைகளை சந்திப்பார் என்று அவர் உறுதியாக நம்பினார்.
அனாதை இல்லத்தின் தேவைகளை கர்த்தர் அற்புதமாக சந்தித்த சம்பவங்கள் ஏராளம். அதில் ஒன்று இப்படியாக இருக்கிறது... ஒரு காலை வேளையில், அவர்களுக்கு பொருட்கள் தீர்ந்துவிட்டது, குழந்தைகளுக்குச் சாப்பிட எதுவும் இல்லை. ஆனால் ஜெப வீரன் கவலை அடையவில்லை. அவர் கர்த்தருக்கு முன்பாக தலை வணங்கி அவரை துதித்தார்: 'அப்பா பிதாவே ... எனக்கும் என் குழந்தைகளுக்கும் உணவு வழங்கியதற்கு நன்றி'. அவர்களின் பசியைத் தணிக்க எதுவும் இல்லை என்றாலும், முல்லர் தனது ஜெபத்தை இவ்வாறே தொடர்ந்தார். குழந்தைகள், உணவு தட்டுப்பாடு தெரியாமல் காலை உணவுக்காக வரிசையில் நின்றனர். முல்லர் தனது ஜெபத்தை தொடர்ந்தபோது, திடீரென்று கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ஆம், ஒரு அதிசயம் நடந்தது! குழந்தைகளுக்கான ரொட்டி மற்றும் பாலுடன், கனமான பொட்டலத்துடன் ஒரு பேக்கரி உரிமையாளர் வந்திருந்தார். கர்த்தர் அவருடைய ஜெபத்திற்கு ஆச்சரியமாக பதிலளித்தார். இத்தகைய நிகழ்வுகளின் பட்டியல் நிறைய இருக்கிறது.
மேலும் சில அனாதை இல்லங்களை உருவாக்க கர்த்தர் அவரது இதயத்தில் கிரியை செய்தார். கடுமையான பணத்தேவைகளுக்கு மத்தியிலும், அவர் தேவன் முன் முழங்காற்படியிட்டு, கர்த்தர் தருவார் என்று உறுதியாக விசுவாசித்தார். ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தங்குமிடம் வழங்க வேண்டுமென்ற அவரது ஜெபம் மற்றும் நம்பிக்கை நிறைவேறியது.
ஜார்ஜ் முல்லரின் வாழ்க்கை, நமது வாழ்க்கை பயணத்தில் நாம் சந்திக்கும் சவால்கள், சோதனைகள் மற்றும் இன்னல்களைக் கருத்தில் கொள்ளாமல், ஜெபத்துடனும் நம்பிக்கையுடனும் முன்னேற நமக்கு எப்போதும் உத்வேகமாக நிற்கிறது.